அடுத்த அதிர்ச்சி... விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

 
அதிமுக சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தவெக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி ரம்யாவும் இன்று நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். 2021-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் சேர்க்கப்பட்டு, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த 2024-ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜரானார்.

சி.விஜயபாஸ்கர்

காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 8 மணி நேரம் அதிகாரிகள் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது சொத்து விவரங்கள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் அளித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டன. தேவைப்படும்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.

விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது மனைவி ரம்யாவுக்கும் அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.