மதுரையில் அடுத்த பயங்கரம்... அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞர் படுகொலை - வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு!
மதுரை மாவட்டம் மேலூரில் அமைந்துள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் செல்லத்துரை (24) என்ற இளைஞர் மர்மமான முறையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் காரணங்கள் என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
