பாலத்தின் அடியில் இருந்து வந்த சத்தம்.. உற்று பார்த்தால் பச்சிளம் குழந்தை.. வீசி சென்ற நபர்களுக்கு வலைவீச்சு!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கொம்மநாயக்கனஅள்ளி அருகே தர்மபுரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை மர்மநபர்கள் அதிகாலையில் வீசிச் சென்றனர். இந்நிலையில், காலையில் பாலத்தின் அடியில் குழந்தை அழுது கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதன் அருகே சென்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை பையில் சுற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பாலக்கோடு பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட ஆட்சியர் க.சாந்தி, பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்ட தகவல் அறிந்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். மேலும் குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து குழந்தையை பாதுகாப்பாக பராமரிக்க டாக்டர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதன்பின், குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தைகள் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை பாலத்தின் அடியில் வீசிய மர்ம நபர் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலக்கோடு, தர்மபுரி பகுதிகளில் பிறந்த பெண் குழந்தையை பாலத்தின் அடியில் வீசி சென்ற மர்ம நபர்களை அடையாளம் காணும் வகையில், பாலக்கோடு, தருமபுரி பகுதிகளில் கர்ப்பிணி பெண்களின் விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், தர்மபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை பிரிவு மற்றும் கொம்பநாயக்கனள்ளி பாலம் செல்லும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து, குழந்தையை இறக்கிவிட்டு சென்ற மர்மநபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சமீபகாலமாக தர்மபுரி மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பெண் என நிர்ணயம் செய்யும் போது, கருக்கலைப்பு செய்யும் கும்பல் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை பாலத்தின் கீழ் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!