தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடக்கம் - சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் மிக முக்கிய மழைக்கால ஆதாரமாகத் திகழும் வடகிழக்கு பருவமழை இன்று அக்டோபர் 14ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman Pradeep John) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், வரவிருக்கும் இரண்டு வாரங்களுக்கான மழை நிலவரம் குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாகத் தலை நகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கடலோரப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்யக்கூடும். இன்று தொடங்கும் இந்த மழைப் பொழிவு அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களுக்குப் பரவலாக நல்ல மழை கிடைக்கும். அதேபோல் தெற்கு மாவட்டங்களிலும் வலுவான மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வரவிருக்கும் அடுத்த 2 வார காலங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி நிலவும் ஒரு சூழல் காணப்படும்.

பருவமழைக்கான மேகக் கூட்டங்கள் திரண்டு வரும் சூழலில், மக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
