தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!

 
இடி மின்னல் மழை

தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் பரவலான மழைப்பொழிவை வழங்கக்கூடிய வடகிழக்கு பருவமழை இன்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. கடந்த சில மாதங்களாக நிலவிய தென்மேற்கு பருவமழையின் விடைபெறலைத் தொடர்ந்து, தற்போது புதிய வளிமண்டல சுழற்சிகளின் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 'எல்நினோ' (El Nino) தாக்கத்தின் காரணமாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், பல பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து இன்றுடன் முழுமையாக விலகும் சூழல் உருவாகியுள்ளது.

மழை

அதே நேரத்தில், தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அனைத்துச் சாதகமான சூழல்களும் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது. குறிப்பாக, குமரிக்கடல் பகுதியிலிருந்து ஒடிசா கடலோரப் பகுதிகள் வரை மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாகச் செல்லும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும்.

வடகிழக்கு பருவமழையின் முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது: விருதுநகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

கனமழை பெய்யும் பிற மாவட்டங்கள்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் இதர பகுதிகள்: ஏனைய தமிழகப் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

பருவமழையின் தொடர்ச்சியாக நாளையும் தமிழகம் முழுவதும் மழையின் தாக்கம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்தக் காலத்தில், எல்நினோ தாக்கத்தின் எதிரொலியாகப் பருவமழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தொடக்க நாேலேயே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.