கதறிய பெற்றோர்... திருமணமான 4 நாளில் புதுப்பெண் மர்ம மரணம்!

 
புதுமணப்பெண் புதுமணப்பெண்

பீகார் மாநிலத்தில் திருமணம் முடிந்த நான்கே நாட்களில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம், வரதட்சணை கொடுமையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் கண்ணீர் மல்கக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த சஞ்சு குமாரி என்பவருக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோதே, மணமகன் வினோத் தரப்பினர் மணமகள் வீட்டாரிடம் கூடுதலாக ஒரு தங்கச் செயின் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் போதிய பணம் இல்லை எனக் கூறி, சஞ்சு குமாரியின் பெற்றோர் திருமணத்திற்குப் பிறகு தருவதாக உறுதியளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமாதானமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை முடித்துள்ளனர்.

திருமணம்

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் சென்ற சஞ்சு குமாரி, மகிழ்ச்சியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்குவார் என அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், திருமணமான நான்காவது நாளிலேயே சஞ்சு குமாரி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாகச் சஞ்சு குமாரியின் புகுந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

தங்கள் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பலவீனமானவள் அல்ல என்றும், கூடுதல் நகை கேட்டு மாப்பிள்ளை வீட்டாரால் கொடுக்கப்பட்ட மன உளைச்சல் அல்லது சித்திரவதை காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். திருமணத்தின் போது நிலவிய நகை விவகாரமே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்பது அவர்களது வலுவான சந்தேகமாக உள்ளது.

5வது திருமணம்

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சஞ்சு குமாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முடிவில் தான் இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உறுதியாகத் தெரியும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மணமகன் வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருமணமான சில நாட்களிலேயே ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை இப்படி மர்மமான முறையில் முடிவுக்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.