அலறிய பயணிகள்... நடுரோட்டில் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து கழன்று ஓடிய டயர்கள் - பஞ்சரான ‘வெற்றிப் பயணம்’!
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரிலிருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் பின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பயணிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
பவுஞ்சூரிலிருந்து மதுராந்தகம் நோக்கித் தடம் எண் 100C அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. மதுராந்தகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் பின்புறம் இருந்த இரண்டு சக்கரங்களும் திடீரென கழன்று ஓடின.

சக்கரங்கள் கழன்றதைக் கவனித்து நிலைமையை உடனே புரிந்துகொண்ட பேருந்து ஓட்டுநர், மிகுந்த சாமர்த்தியத்துடன் பேருந்தினைச் சாலையோரமாகக் கொண்டு போய் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் வழங்கிவிட்டு, இதுபோன்று பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்குவதா எனப் பயணிகள் கடும் வேதனை தெரிவித்தனர். அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கே இப்போது பயமாக இருப்பதாகவும், விபத்துகளைத் தவிர்க்க அனைத்துப் பேருந்துகளையும் முறையாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
