7 ஆண்டுகளாகச் சிறுமி நுரையீரலில் கிடந்த பேனா மூடி ... அதிர்ச்சி!
மும்பை தாராவியைச் சேர்ந்த மைமுனா ஷேக் என்பவரின் 10 வயது மகள் மைஷா தொடர் இருமலால் பாதிக்கப்பட்டாள். சிறுமி தனது 3 வயது முதல் தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் எடைக் குறைவு காரணமாகக் கடும் அவதிப்பட்டு வந்தாள். இதனைத் தொடர்ந்து பெற்றோர் பல மருத்துவமனைகளுக்குச் சென்று குழந்தையைப் பரிசோதித்து சிகிச்சைகளை மேற்கொண்டனர். இருப்பினும் சிறுமிக்குக் காசநோய் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதாகக் கூறி தவறான சிகிச்சைகளையே மருத்துவர்கள் அளித்து வந்தனர். முறையான பரிசோதனை இன்றி அளிக்கப்பட்ட இந்தத் தவறான சிகிச்சைகளால் சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

சிறுமியின் நிலைமை மேலும் தீவிரமடைந்ததை அடுத்து, மும்பையில் உள்ள எஸ்.ஆர்.சி.சி குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு மூச்சுக்குழாய் நிபுணர் மருத்துவர் இந்து போஸ்லா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிரப் பரிசோதனைகளை நடத்தினர். சிறுமியின் நுரையீரலை சி.டி.ஸ்கேன் செய்து பார்த்த போது, இடது நுரையீரலின் மூச்சுக்குழாயில் ஏதோ பொருள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்கோஸ்கோபி பரிசோதனை செய்த போது, பிளாஸ்டிக் பேனா மூடி ஒன்று ஆழமாகச் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கும் மேலாக நுரையீரலின் ஆழமான பகுதியில் பேனா மூடி சிக்கியிருந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை குழுவின் உதவியுடன் சிறுமியின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை வெளியே எடுத்தனர். இருப்பினும் 7 ஆண்டுகளாகப் பேனா மூடி உள்ளேயே இருந்ததால், அப்பகுதியில் கடுமையான தொற்றும் திசுக்களின் அழிவும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக வேறு வழியின்றிச் சிறுமியின் நுரையீரலின் மூன்றில் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். மருத்துவர்களின் தவறான கணிப்பால் தனது மகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதாகத் தாய் மைமுனா ஷேக் கண்ணீர் மல்கக் கூறினார்.
