கதறும் மக்கள்... ஐரோப்பாவில் வெப்ப அலைக்கு 12,000-க்கும் மேற்பட்டோர் பலி!
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் வீசிய வரலாறு காணாத வெப்ப அலையின் கொடூர தாக்கத்தால், 9 ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் நடத்திய புள்ளிவிவர ஆய்வில் தெரியவந்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இந்த கோடைக்கால உயிரிழப்புகள் அமைந்துள்ளதாகப் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பியக் கண்டத்தில் வளிமண்டலத் தடுப்பு காரணமாக உருவான 'வெப்பக் குவிமாடம்' என்ற நிகழ்வே இந்தத் திடீர் வெப்பநிலை உயர்வுக்கும், மரணங்களுக்கும் முதன்மைக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டன் (இங்கிலாந்து - வேல்ஸ்) ஆகிய நாடுகள் இந்த வெப்ப அலையினால் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக ஜூன் 22 முதல் ஜூன் 28 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்த நாடுகளில் சுமார் 10,000-க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரிட்டனில் ஜூன் மாத நடுப்பகுதியில் ஏற்பட்ட வெப்பத்தால் மேலும் 2,200 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 65 மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். கடுமையான வெப்பம் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளே மரணத்திற்கு வழிவகுத்துள்ளன. பல ஐரோப்பிய நாடுகளில் ஜூன் மாத வரலாற்றுப் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஜெர்மனியில் வெப்பநிலை 41.7 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கடுமையான வெப்ப மரணங்கள் பதிவாகியுள்ளன. ஸ்பெயினின் சில பகுதிகளில் 45.1 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்தது.ஜெர்மனியில் வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க ஏரிகள் மற்றும் ஆறுகளில் குளித்தபோது, ஒரே மாதத்தில் 99 பேர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவை உலுக்கி வரும் இதே வேளையில், சர்வதேசக் கடற்பரப்பில் நிலவும் 'எல் நினோ' காலநிலை மாற்ற விளைவினால் இந்தியாவிலும் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்று சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதன் காரணமாக, வரும் காலங்களில் இந்தியாவிலும் கோடைக்கால வெப்பநிலை வழக்கத்தை விடப் பல மடங்கு உயரக்கூடும் என்பதால், போதிய முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே அரசு மற்றும் பொதுமக்கள் திட்டமிட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
