”உதயநிதியைக் கைது செய்தது சரிதான் என்பதே மக்கள் மனநிலை” - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!
பனையூரில் நேற்று மாலை நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் செங்கோட்டையன், உதயநிதி ஸ்டாலின் கைதை நியாயப்படுத்திப் பேசினார்.
"பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டானினைக் காவலத்துறை கைது செய்தது முற்றிலுமாகச் சரியான நடவடிக்கை தான். உதயநிதியைக் கைது செய்தது சரிதான் என்பது தான் தற்போதைய தமிழக மக்களின் பொதுவான மனநிலையாகவும் இருக்கிறது. இதுபோன்ற தரக்குறைவான தவறுகளை இனிமேல் நாட்டில் வேறு யாரும் செய்யத் துணியக்கூடாது" எனத் தெரிவித்தார்.
"முதலமைச்சர் விஜய் ஏன் இந்தியாவையே ஆளக்கூடாது என்ற அளவிற்கு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். 'ஏன் உங்கள் முதலமைச்சரைப் போல மற்ற மாநில முதலமைச்சர்கள் செயல்படுவதில்லை?' எனப் பிற மாநிலத்தவர்கள் கேட்கும் அளவிற்கு ஆட்சி நடக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் உயிருடன் இருந்த வரை அவர்கள் மட்டுமே தமிழகத்தின் முதலமைச்சர்களாக இருந்தார்கள். அதேபோல முதலமைச்சர் விஜய் இருக்கும் வரை அவரே தமிழகத்தின் முதலமைச்சராகத் நீடிப்பார். நாளைக்கே சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் நாம் தான் மாபெரும் வெற்றி பெறுவோம்" என ஆவேசமாகப் பேசினார்.
