அமைச்சர் ஆனந்த் மீது புகாரளித்தவர் தவெகவில் இருந்து நீக்கம்!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமன முறைகேடு புகாரின் தொடர்ச்சியாக, தவெகவில் உள்கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அமைச்சர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்திருந்த தவெகவின் விழுப்புரம் மாவட்ட தெற்கு பகுதி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி, இந்த முறைகேட்டில் அமைச்சர் ஆனந்த் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் தளத்தில் விவாதப் பொருளானது.
இந்நிலையில், கட்சியின் மாண்பிற்கும் கொள்கைகளுக்கும் எதிராகச் செயல்பட்டதாக வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தவெகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன் ராஜ், ஆன்லைன் மூலமாகக் கட்சியில் இணைந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி, கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக மாற்று அரசியல் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளார். கட்சியின் மேலிட அனுமதியின்றி, அமைச்சர் மீது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைத் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் முன்வைத்துக் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதன் காரணமாகவே இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த உள்கட்சி நடவடிக்கை விழுப்புரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
