கட்சி தொடங்கி 7 நாட்களில் கலைத்துவிட்டு தவெகவில் இணைந்தவருக்கு அமைச்சர் பதவி!

 
காஞ்சிபுரம் ரஞ்சித்குமார்

சொந்தமாகக் கட்சி தொடங்கி, அடுத்த ஒரே வாரத்தில் அதனைத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) இணைத்த காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமாருக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய சூழலில், தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக 'எம்.ஜி.ஆர்., அதிமுக' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆர்.வி.ரஞ்சித்குமார். இவர் கட்சித் தொடங்கிய செய்தி அப்போது ஊடகங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

ஆனால், கட்சி தொடங்கிய அடுத்த ஒரே வாரத்திற்குள் அதிரடி முடிவெடுத்த ரஞ்சித்குமார், தனது புதிய கட்சியைத் உடனடியாகக் கலைத்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

ரஞ்சித்குமாரின் இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அவருக்குத் தவெக தலைமை காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. தவெக-வின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மற்றும் தொகுதி மக்களின் ஆதரவோடு காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு அவர் அமோக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

அமைச்சரவை

தேர்தல் முடிந்து முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை மக்கள் மாளிகையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட 23 அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் ஆர்.வி.ரஞ்சித்குமாரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே, அதனைத் தவெக-வுடன் இணைத்துத் தற்போது காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், தவெக அரசின் புதிய அமைச்சராகவும் ரஞ்சித்குமார் உயர்ந்திருப்பது காஞ்சிபுரம் மாவட்ட தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.