சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக நிர்ணயம் - பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவு!

 
சிலிண்டர்

எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கிராம மற்றும் நகர்ப்புறங்கள் என்ற வேறுபாடின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீராக காஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளிக்காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய கிழக்கில் மோதல் வெடித்ததன் காரணமாக உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது, இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. தற்காலிகத் தேவை மேலாண்மை நடவடிக்கையாக அப்பொழுது காஸ் வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும் கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் முன்பதிவு இடைவெளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கேஸ் சிலிண்டர்

தற்போது போர் சூழல் ஓய்ந்து எரிபொருள் வினியோக நிலைமை சீராகியுள்ளதாலும், மறு நிரப்பல் நிலுவை கணிசமாகக் குறைந்துள்ளதாலும் பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேறுபாடின்றி நாடு முழுவதும் ஒரே சீராக சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக மாற்றப்பட்டு, இதனை உடனடியாக அமல்படுத்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சிலிண்டர் மானியம்

இந்த அறிவிப்பு குறித்த விவரங்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அமைச்சகத்தின் உத்தரவு நகலையும் அதில் பதிவிட்டுள்ளார்.