வைரலாகும் புகைப்படம்... நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்... ட்ரம்ப் போப் உடையில் ?!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து அவரின் உடலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் தலைவர் என லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். ஏப்ரல் 26ம் தேதி ரோமில் அவரது விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த போப் யார் என விரைவில் முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனை மற்றும் ரகசிய வாக்கெடுப்பும் மே 7 ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செய்யறிவு புகைப்படம் எனக் கூறப்படும் டிரம்ப்பின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேநேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், டிரம்ப்பின் இந்த புகைப்படம் போப் ஆண்டவரையும் புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, புதிய போப் யாராக இருக்க வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், 'நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன். அதுதான் என்னுடைய முதல் தேர்வாக இருக்கும்' என நகைச்சுவையாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.