தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்... அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பேர் உட்பட 12 பேர் பலி!

 
அமெரிக்காவில் விமானம் அமெரிக்காவில் விமானம்

அமெரிக்காவில் ஒட்டுமொத்த சர்வதேச விண்வெளி மற்றும் சாகச உலகையே உலுக்கும் வகையிலான விமான விபத்துச் சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. வானத்தில் இருந்து குதித்துச் சாகசம் செய்ய ஆசையோடு சென்ற 11 வீரர்கள் உட்பட ஒரே விமானத்தில் பயணித்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள பிராந்திய விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் "டிவின் ஓட்டர்" ரக சிறிய சாகச விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில், வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்துச் சாகசம் செய்யும் உலகப் புகழ்பெற்ற "ஸ்கை டைவிங்"  வீரர்கள் 11 பேர் மற்றும் விமானத்தை இயக்கிய ஒரு பிரதான பைலட் என மொத்தம் 12 பேர் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்துள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்தச் சிறிய ரக விமானம், வான்பரப்பில் சில நூறு அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த வேளையில், அதன் இன்ஜினில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், வானிலேயே தலைகீழாகச் சுழன்று, அடுத்த சில நொடிகளுக்குள் காதைப்பிளக்கும் சத்தத்துடன் விமான நிலையத்தின் அருகே இருந்த வறண்ட புல்வெளித் தரையில் அதிவேகமாக விழுந்து மோதியது.

தரையில் விழுந்து மோதிய அடுத்த விநாடியே, விமானத்தின் எரிபொருள் டேங்க் பயங்கரமாக வெடித்துச் சிதறியதால், ஒட்டுமொத்த விமானமும் மளமளவென நெருப்புப் பிழம்பாக மாறியது. விமானத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 11 ஸ்கை டைவிங் வீரர்களும், பைலட்டும் வெளியில் வர முடியாமல் தீயில் கருகியும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ரசாயன வாகனங்களுடன் விரைந்து வந்த அமெரிக்கத் தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கருகிய நிலையில் இருந்த 12 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இக்கோரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரிய உயர் அதிகாரிகள் விபத்து நடந்த மிசோரி பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். விமானத்தின் சிதைந்த பாகங்கள் மற்றும் கறுப்புப் பெட்டியை கைப்பற்றியுள்ள அதிகாரிகள்,  விமான விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் உயர்மட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.