"தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்" - பாமக பொதுக்குழுவில் தீர்மானம்!
தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏற்பட்டுள்ள கடுமையான நீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சியின் முக்கியப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கம் போலப் பெய்யாமல் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே பெய்துள்ளதால், மாநிலம் முழுவதும் கடும் விவசாய பாதிப்பும் வறட்சியும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

பருவமழைப் பொய்ப் காரணமாகத் தமிழ்நாட்டை உடனடியாக "வறட்சி பாதித்த மாநிலமாக" மாநில அரசு அறிவிக்க வேண்டும் எனப் பொதுக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலவரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
நீர் பற்றாக்குறை காரணமாகக் குறுவை மற்றும் சம்பா சாகுபடியைச் செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
