போலீசார் அலட்சியம்... நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் தொல்லை; தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து வன்முறை!

 
தாக்குதல்

கோவை வழுக்கம்பாறை பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரின் அடையாள அட்டையைப் பறித்து வம்பிலுழுத்ததை தட்டிக்கேட்ட அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் மீது, கும்பல் ஒன்று நள்ளிரவில் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தி, ரொக்கப் பணம் மற்றும் நகைகளைச் சூறையாடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், கோவை வழுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை வழிமறித்து, அவரது கல்லூரி அடையாள அட்டையை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு அநாகரிகமாகத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் தந்தை சிவக்குமார், இளைஞர் சூர்யாவின் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள், அன்றைய தினமே நள்ளிரவில் சிவக்குமாரின் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல், வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்களை அடித்துச் சூறையாடியதுடன், அவர்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ₹1.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளையும் அந்த கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலால் காயமடைந்த சிவக்குமார், வன்முறையில் ஈடுபட்ட சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடனடியாகப் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்துள்ளார்.

"தாக்குதல் நடந்து உயிராபத்து ஏற்பட்ட நிலையில், நாங்கள் புகார் அளிக்கப் போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றோம். ஆனால் அங்கிருந்த போலீசார் எங்களைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், பல மணி நேரம் காவல் நிலையத்திலேயே காக்க வைத்தனர். பின்னர், இச்சம்பவம் நடந்த இடம் தங்களது எல்லைக்குட்பட்டது அல்ல என்று கூறி, எங்களை மதுக்கரை காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறி அலைக்கழித்தனர்" என சிவக்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கினால், குற்றச் செயலில் ஈடுபட்ட சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் மீது இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை தாக்கப்பட்ட நிலையிலும், எல்லைப் பிரச்சினையைக் காரணம் காட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்யத் தாமதித்து வருவது கோவை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.