திணறும் போலீசார்... ட்ரோன்கள், மோப்ப நாய்கள், தாயிடம் டிஎன்ஏ டெஸ்ட்... 9வது நாளாக சிறுமியைத் தேடும் பணி தீவிரம்!

 
சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காமல் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்தத் தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி (7). கடந்த 11-ம்தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு வழக்கம் போல் வீட்டில் பெற்றோருடன் படுத்துத் தூங்கியுள்ளார்.

ஆனால், மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமி ஹேமாவதியைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும்  கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 8 நாட்களாகத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், தற்போது 9-வது நாளாகத் தீவிரத் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகள் மற்றும் தடயவியல் ஆய்வு: கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் செல்லும் போலீசார், அங்குள்ள விவரங்களைச் சேகரித்து வீடுகளின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சென்னை ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் தடயவியல் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

டிரோன்கள் மற்றும் மோப்ப நாய் உதவி: சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய விளைநிலங்கள், முட்புதர்கள், ஏரிகள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் மற்றும் மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறைகளின் இடுக்குகள் ஆகியவற்றில் சிறுமி இருக்கிறாளா என்பதை ஆய்வு செய்ய 50 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆலம்பூண்டி மலைமீது 20 போலீசார் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வலை வீசி தேடும் பணி: தீயணைப்புத் துறையினர் ஆலம்பூண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கித் தேடி வருகின்றனர். இதுதவிர, மரக்காணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மீன்பிடி சுருக்குமடி வலைகளைக் கொண்டு அதிக ஆழமுள்ள பெரிய கிணறுகளிலும் வலை வீசித் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிறுமி

விசாரணை மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வு: வழக்கில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள 3 செல்போன் டவர்களில் பதிவான 600 அழைப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆலம்பூண்டி சிவன் கோவிலில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியாரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தாலும், சிறுமி மாயமான விவகாரத்தில் இதுவரை எந்தவிதத் துப்பும், தகவலும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.