அரசியல் ஆட்டம் ஆரம்பம்... பெரம்பூரில் 'விஜய்'க்கு எதிராக களமிறக்கப்பட்ட விஜய், ஜோசப் சுயோட்சை வேட்பாளர்கள்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சென்னை பெரம்பூரில், தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு இன்று ஏற்கப்பட்டது. ஆனால், அதே தொகுதியில் அவரைப் போலவே பெயர் கொண்ட 4 பேர் போட்டியிடுவது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டன. அதில், நடிகர் விஜய்யின் முழுப் பெயரான 'ஜோசப் விஜய்' என்பதனை நினைவுபடுத்தும் வகையில் ஜி. விஜய், கே. விஜய், எஸ். ஜோசப், எம். ஜோசப் என்று நான்கு சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு பேரும் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் இருப்பது, குறிப்பாகப் படிப்பறிவு குறைந்த அல்லது முதிய வாக்காளர்கள் மத்தியில் வாக்குப்பதிவின் போது குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.
வழக்கமாக ஒரு வலுவான வேட்பாளர் ஒரு தொகுதியில் போட்டியிடும்போது, அவரது வாக்குகளைப் பிரிப்பதற்காகப் பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதே பெயருடைய நபர்களைப் போட்டியிட வைப்பது தமிழக அரசியலில் நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் ஒரு தந்திரமாகும். இது எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட அரசியல் சூழ்ச்சி என்று தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தவெக-வுக்குத் தேர்தல் ஆணையம் ஒரு நிரந்தரச் சின்னத்தை ஒதுக்கிய பிறகு, அந்தச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமே இந்த 'பெயர்க் குழப்பத்தை' முறியடிக்க முடியும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 40-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் இந்த 4 பேரின் பெயர்கள் தவெக தலைவர் விஜய்யின் பெயரோடு ஒத்துப்போவதால், வாக்குச் சீட்டில் விஜய்யின் பெயர் எத்தனையாவது இடத்தில் வரும்? அவருக்கு என்ன சின்னம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தன்னைப் போன்ற பெயர்களைக் கொண்டவர்களுடன் தேர்தல் களத்தில் மோத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் 'தளபதி' விஜய்.
