பாட்டிலுக்கு ரூ.10 குறைகிறது... இனி டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலை தான்... பணியாளர் சங்கம் உறுதி!
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனி அச்சிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், எம்.ஆர்.பி விலையிலேயே மது விற்பனை செய்யப்படும் என்றும் டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதியளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் பழனி பாரதி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான பின்னணி குறித்து அமைச்சரிடம் நேரில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சரக்கு இறக்கு கூலி, பாட்டில் உடைப்பு இழப்பு, காலி பாட்டில்களைக் கையாளும் செலவு மற்றும் இரவு நேரக் காவல் செலவு போன்ற நிர்வாக ரீதியான செலவுகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் குறித்து அமைச்சர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள 4,200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் சுமார் 24 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அதை வரவேற்போம். அவ்வாறு அமல்படுத்தப்படும் பட்சத்தில், பல ஆண்டுகளாகப் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசுத் துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். தற்போதைய ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஈ.எஸ்.ஐ வசதிகளை வழங்கியதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"டாஸ்மாக் கடைகளில் இனி அச்சிடப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்ற அரசின் வழிகாட்டுதலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துச் சங்க நிர்வாகிகளும் கூடுதல் கட்டணமின்றி எம்.ஆர்.பி விலைக்கே மது விற்பனை செய்வது என்ற முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் கூறி வந்த மதுப்பிரியர்களின் நீண்ட நாள் புகார்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
