வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்தது.. வணிகர்கள் மகிழ்ச்சி!

 
சிலிண்டர்

சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பாரத், இந்துஸ்தான், மற்றும் இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று புதிய சிலிண்டர் விலை பட்டியலை வெளியிட்டுள்ளன.

கடந்த 4 மாதங்களாக மேற்காசியப் பகுதிகளில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் சர்வதேசச் சந்தை நெருக்கடிகளால் விண்ணை முட்டும் அளவிற்குத் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த வணிகச் சிலிண்டரின் விலை, முதன்முறையாகக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை இன்று ஒரே நாளில் ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பின் மூலம், நேற்று வரை சென்னையில் ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிகச் சிலிண்டர், இன்று முதல் ரூ.3,106.50 (தோராயமாக ரூ.3,106) என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டர் விலை பெருமளவு குறைந்தாலும், இல்லத்தரசிகள் பயன்படுத்தும் வீட்டு உபயோகச் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. "பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி, சென்னையில் கடந்த மாத விலையான ரூ.957.50 என்ற அளவிலேயே நீடிக்கிறது."

கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து விலை ஏறி வந்ததால் ஹோட்டல்கள், டீக்கடைகள், மற்றும் கேட்டரிங் நிறுவனங்களை நடத்தும் சிறு வணிகர்கள் தங்களது தொழில் நடத்துவதில் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். ஒரே அடியாக ரூ.172.50 வரை விலை சரிந்திருப்பது, உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை மேலும் உயராமல் தடுக்க உதவுவதுடன் வணிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.