சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.160-யைத் தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
பருவமழை பொய்ப்பு மற்றும் கடுமையான வறட்சி காரணமாகச் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் விலை திடீரென மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினசரி 8 முதல் 9 லாரிகளில் வந்த சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது கடுமையாகக் குறைந்துள்ளது. போதிய மழையின்மை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் முக்கியக் காரணமாகும்.

கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் ரகத்திற்கு ஏற்ப ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்கப்படுகிறது. அதேசமயம், வெளி மார்க்கெட்டுகளில் உள்ள சில்லரை காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.160 வரை உச்சத்தைத் தொட்டுள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. மொத்த விற்பனையில் கிலோ ரூ.60 வரையிலும், சில்லரை விற்பனையில் ரூ.75 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது புரட்டாசி மாதம் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ முறைக்கு மாறியுள்ளனர். இதனால் காய்கறிகளுக்கான தேவை அதிகரித்து, பீன்ஸ், அவரைக்காய், கேரட், முருங்கைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் சில்லரை கடைகளில் கிலோ ரூ.70 முதல் ரூ.120 வரை உயர்ந்துள்ளது.
