விண்ணைப் பிளந்த ரங்கா... ரங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!

 
ஸ்ரீரங்கம்


108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் ஆண்டின் அனைத்து நாட்களிலும்  திருவிழாக்கள் என்ற போதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர்த் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா 3 ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கம்


இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை ஏப்ரல் 8ம் தேதியும், நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி சேவை ஏப்ரல் 11ம் தேதியும்  நடைபெற்றது.விழாவின் முக்கிய கோரதம் எனப்படும் பங்குனித் தேரோட்டம் இன்று 12ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு வீதி உலாவாக வந்து தேரில் அமர்ந்தார்.

ஸ்ரீரங்கம் தாயார்
இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு  100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் கலந்து  கொண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா... கோவிந்தா... ரங்கா... ரங்கா... என கோஷங்களுடன் ஆரவாரமாக தேரை வடம் பிடித்து வீதி உலாவாக இழுத்துச் சென்றனர்.
இந்த திருவிழாவில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

From around the web