வானத்தில் இருந்து கொட்டிய 'மீன் மழை'... போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!

 
மீன் மழை

தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையின் போது, வானத்தில் இருந்து மழையுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்கள் கீழே விழுந்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள சென்னூர் பகுதியில் இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.

அண்மையில் பெய்த கனமழையின் போது, அங்குள்ள துப்புலா அனுமன் தெருவில் திடீரென வானத்தில் இருந்து மழைத்துளிகளோடு சேர்ந்து நூற்றுக்கணக்கான சிறிய ரக மீன்களும் தரையில் கொட்டின. சாலையெங்கும் மீன்கள் துள்ளிக்குதித்து விழுந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த பொதுமக்கள், அவற்றை உணவிற்காகக் கைகளால் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். சிலர் தங்களது குடைகளைத் தலைகீழாகப் பிடித்து வானத்தில் இருந்து விழுந்த மீன்களைச் சேகரித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வானத்தில் இருந்து மீன்கள் கொட்டுவது குறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளித்துள்ள அறிவியல் காரணங்களின் படி, ஏரி, குளம் அல்லது கடல் பகுதிகளின் மேல்பரப்பில் சக்திவாய்ந்த சூறாவளி காற்று வீசும்போது, அது ஒரு பெரிய உறிஞ்சுக் குழாய் போலச் செயல்படுகிறது. இந்த நீர்ச்சுழற்காற்று தண்ணீரை மேல்நோக்கி இழுக்கும்போது, அதில் நீந்தும் சிறிய ரக மீன்களும் மேகங்களை நோக்கி மேலே உறிஞ்சப்படுகின்றன.

காற்றினால் பல கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்படும் இந்த மீன்கள், சுழற்காற்றின் வேகம் குறையும் போதோ அல்லது மேகங்கள் குளிர்ந்து மழையாகப் பெய்யும் போதோ, மழைத்துளிகளோடு சேர்ந்து தரையில் 'மீன் மழையாக'க் கீழே விழுகின்றன.