நிஜமானது ஐபிஎஸ் அதிகாரி ரவியின் கணிப்பு - தவெகவின் அசுர வெற்றியை முன்கூட்டியே கணித்து கூறிய முன்னாள் டிஜிபி!

 
ரவி ரவி

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் டிஜிபியுமான ரவி வெளியிட்ட தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்கும் திசையில் பயணித்து வருவது, இவரது கணிப்புகளை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. சுமார் 2,440 ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளின் உதவியுடன், 2.44 லட்சம் வாக்காளர்களிடம் மிகவும் துல்லியமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரவி

நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தவெக-விற்குச் சுமார் 41 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், அக்கட்சி 121 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. மற்ற கட்சிகள் எதனுடனும் கூட்டணி வைக்காமல் தவெக தனித்து ஆட்சியமைக்கும் நிலையை எட்டும் என்று ரவி தெரிவித்திருந்தார். தற்போதைய அதிகாரப்பூர்வ நிலவரப்படி தவெக 105 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், இவரது கணிப்பு தற்போதைய தேர்தல் முடிவுகளுடன் வெகுவாக ஒத்துப்போகிறது.

தவெக விஜய்

முன்னதாக, திமுக 57 இடங்களிலும் அதிமுக 46 இடங்களிலும் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில், தவெக-வின் இந்த விஸ்வரூப வளர்ச்சி தமிழக அரசியலையே அதிர வைத்துள்ளது. "கூட்டம் ஓட்டாக மாறாது" என்ற விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலை நெருங்கி வருகிறது. ஒரு ஓய்வுபெற்ற உயர் காவல் அதிகாரி, கள நிலவரத்தைத் துல்லியமாக ஆராய்ந்து வெளியிட்ட இந்தக் கருத்துக்கணிப்பு, தற்போது தமிழகத்தின் புதிய அரசியல் மாற்றத்தை உறுதிப்படுத்தும் சான்றாக மாறியுள்ளது.