"திமிராக நடந்து கொண்டதே திமுக தோல்விக்குக் காரணம்!" - நடிகர் போஸ் வெங்கட்!
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சந்தித்த அதிர்ச்சித் தோல்வி குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்தும் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் மிக வெளிப்படையான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.
முன்னதாகத் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது கொள்கைகளைக் கடுமையாக விமரிசித்து வந்தவர்களில் நடிகர் போஸ் வெங்கட்டும் ஒருவர். ஆனால், தற்போதைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை அவர் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார்.
"தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, என் மகள் என்னிடம் வந்து விளையாட்டாகக் கலாய்த்தாள். தனக்கு மட்டும் இப்போது 18 வயது பூர்த்தியாகி, வாக்குரிமை இருந்திருந்தால், தான் நிச்சயம் விஜய்க்குத் தான் ஓட்டுப் போட்டிருப்பேன் என்று கூறி என்னைக் கிண்டல் செய்தாள்."
தேர்தலில் திமுக அடைந்த பலத்த பின்னடைவு குறித்துப் பேசிய போஸ் வெங்கட், கட்சியின் அடிமட்ட மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுள்ளார். திமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் தங்களது அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியது (அதிகார துஷ்பிரயோகம்) மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சில திமுகவினரின் அகங்காரமான மற்றும் திமிரான செயல்பாடுகளே ஒட்டுமொத்தக் கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக அமைந்துவிட்டது. இந்தத் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, திமுகவினர் அனைவரும் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு, எங்கு தவறு நடந்தது என்பது குறித்து உடனடியாகச் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
