பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களை நாளை முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புப் பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காலக்கெடு: மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களுக்குள் https://dgeapp.tnschools.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாணவர்களின் பெயரோ அல்லது பெற்றோரின் பெயரோ தமிழில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின், ஏற்கனவே உள்ள பெயரை முழுமையாக நீக்கிய பின்னரே புதிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். சிறப்புச் சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் அடையாள அட்டை அல்லது உரிய மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரின் உறுதிமொழி படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணம் செலுத்திய பின்னர் மாணவர்களின் விவரங்களில் எந்தவிதத் திருத்தமும் மேற்கொள்ள முடியாது.

உறுதிமொழிப் படிவத்தில் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும், பள்ளித் தலைமை ஆசிரியரும் அனைத்து விவரங்களையும் ஒருமுறைக்குப் பலமுறை கவனமாக உறுதிசெய்த பின்னரே கையெழுத்திட வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்படும் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் பிழைகள் கண்டறியப்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும் பள்ளித் தலைமை ஆசிரியரும்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
