அனல் காற்றுடன் கொளுத்தும் வெயில் ... வேலூரில் 107.6 டிகிரி பதிவு!

 
வெயில் வெயில்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் அளவு படிப்படியாக உயரத் தொடங்கி, தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 28 நாட்களாகத் தொடர்ந்து 100 டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகி வருவது வேலூர் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெயில் வெப்பம் அக்னி

காலையிலேயே வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்குவதால், பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பணிகளுக்காக வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 100 டிகிரியைத் தொட்ட வெப்பநிலையானது, ஏப்ரல் தொடக்கத்தில் 108 டிகிரி வரை எட்டிப் பார்த்தது. நேற்று வீசிய அனல் காற்றினால் சாலைகளில் கானல் நீர் தென்பட்டதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வெப்பத்தின் கொடுமையால் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெயில்

மாவட்டம் முழுவதும் நிலவும் இந்த அதீத வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றி வருவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனல் காற்று வீசுவதால் நடந்து செல்பவர்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், பொதுமக்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.