ஓணம் கசவு ஆடைகளின் ரகசியமும், மூன்றடி வாமன அவதார மகிமையும்!

 
ஓணம் திருவோணம்

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தையும், மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தையும் போற்றும் விதமாக அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பிரகலாதனின் பேரனான மகாபலி சக்கரவர்த்தி இந்திர பதவியைப் பெற யாகம் செய்தபோது, திருமால் வாமன உருவில் வந்து மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார். மாபலி தானம் வழங்க ஒப்புக் கொண்டதும், பெருமாள் திரிவிக்ரமனாகப் பேருருவம் எடுத்து, முதல் அடியால் பூமியையும், இரண்டாவது அடியால் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமின்றி மாபலி தன் தலையையே தாரை வார்த்துக் கொடுக்க, அவரைச் சிரஞ்சீவியாக ஆசீர்வதித்து பாதாள உலகிற்கு அனுப்பி வைத்தார் பெருமாள்.

ஓணம் திருவோணம்

ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று தன் நாட்டு மக்களை நேரில் வந்து காணும் வரத்தை மாபலி பெற்றார். இந்நாளே திருவோணத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதுமே ஓணம் புடவை பிரபலமானது. மங்களகரமான நிகழ்வுகளில் பெரும்பாலானோர் வெள்ளை நிறத்தைத் தவிர்க்கும் சூழலில், கேரள மக்கள் 'கசவு' எனப்படும் சந்தன வெள்ளை மற்றும் தங்க நிறப் பார்டர் அமைந்த ஆடைகளையே பாரம்பரியமாக அணிகின்றனர். ஆடையில் உள்ள வெள்ளை நிறம் தூய்மை, அமைதி மற்றும் கலாச்சார ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது.

நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்

அறுவடைத் திருநாளான ஓணத்தில், தங்க இழைகள் கொண்ட பார்டர் நாட்டின் செழுமை, செல்வம் மற்றும் வளமான வரலாற்றைக் குறிக்கிறது. ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரே பாணியிலான ஆடையை அணிவது குடும்ப ஒற்றுமையையும், உள்ளூர் நெசவுத் தொழில் கைவினைஞர்களுக்கான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.