சாலை விபத்தில் பாமக ஒன்றிய செயலாளர் உயிரிழப்பு!

திருப்போரூரை அடுத்துள்ள இள்ளலூர் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தமூர்த்தி. இவரது மகன் கங்காதரன் (36). இவர் திருப்போரூர் மத்திய ஒன்றிய பாமக செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், பார்கவி என்ற மனைவியும் ஓவியா (5), தேவசேனா (2) என்று இரு மகள்களும் உள்ளனர்.
மருந்து விற்பனையாளராக வேலைப் பார்த்து வந்த கங்காதரன், கடந்த பிப்ரவரி 13ம் தேதி சொந்த வேலையாக மதுராந்தகம் சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் வழியாக திருப்போரூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் திருப்போரூர் மின் வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்த மூர்த்தி (40) என்பவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, தண்டலம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பாமக ஒன்றிய செயலாளர் கங்காதரன் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுடன் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாமக ஒன்றிய செயலாளரின் உடலுக்கு திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.