"ஒட்டுப்போட்டுத் தைத்தால்தான் சட்டை அழகாக இருக்கும்!" - விஜய்க்கு அன்பில் மகேஷ் பதிலடி!
2026 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று திருச்சியில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் அன்பில் தர்மலிங்கம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தலைவர் விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்தார்.
முன்னதாக விஜய் பேசுகையில், "திமுக கூட்டணி என்பது உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது போன்றது; கிழிந்த துணியைத் தைத்து வைத்தது போன்றது" எனச் சாடியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அன்பில் மகேஷ், "வெறும் துணி மட்டும் இருந்தால் அதில் எந்தப் பயனும் இல்லை. அந்தத் துணியை வெட்டி, ஒட்டுப்போட்டுத் தைத்தால்தான் ஒரு சட்டை அழகாக உருவாகும். அதுதான் திமுக கூட்டணி. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்துச் செல்வதுதான் எங்களின் பலமே தவிர, அது பலவீனம் அல்ல."
புதிதாக வந்தவர்கள் கற்றுக் கொள்வார்கள்: "அரசியல் களத்திற்குப் புதிதாக வந்துள்ள தவெக-வினர் வரும் காலங்களில் இதையெல்லாம் புரிந்துகொள்வார்கள். அனுபவம் மிக்கவர்கள் சிறைக்குச் சென்றதாக விஜய் கூறுகிறார், ஆனால் சட்டப்படி போராடி அவர்கள் வெளியே வருவார்கள்."

தவெக கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பேசிய அமைச்சர், "தற்போது தமிழக அரசு ஒரு காபந்து அரசு போலத்தான் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி முறையாக அனுமதி கேட்டால் யாருக்கும் அனுமதி மறுக்கப்படாது. விதிகளைப் புரிந்துகொள்ளாமல் பேசுவது சரியல்ல" என்றார்.
"திருச்சி எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் நிரூபிக்கும். எங்கள் கவனம் முழுவதும் 'தமிழ்நாடு அணியா? அல்லது டெல்லி அணியா?' என்பதில் தான் உள்ளது. யார் எங்குப் போட்டியிட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை" எனத் தெம்பாகக் குறிப்பிட்டார்.
