‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம்... சிம்புவுக்கு ஆதரவாக டி.ராஜேந்தர் அறிக்கை!

 
டி.ராஜேந்தர் டி.ராஜேந்தர்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிம்புவின் முந்தைய படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் நிலவும் சில பிரச்சனைகளைக் காரணமாகக் காட்டி, தயாரிப்பாளர் சங்கம் இந்தப் படப்பிடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்துச் சிம்புவின் தந்தையும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழைய விவகாரங்களை முன்னிறுத்தி, தற்போது சுமுகமாக நடைபெற்று வரும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பைத் தடுப்பது முறையல்ல. இது சிம்புவின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை."

சிம்பு

"தயாரிப்பாளர் சங்கம் என்பது தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பை நிறுத்துவதன் மூலம் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள்."

இந்தத் தடையை நீக்கத் தயாரிப்பாளர் சங்கம் முன்வராத பட்சத்தில், சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு ஒரு பிரம்மாண்டமான படைப்பில் இணைந்துள்ள நிலையில், அதற்குத் முட்டுக்கட்டை போடப்படுவதைக் கண்டு STR ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #SaveArasan, #SupportSTR போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கித் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

வெற்றிமாறன்

மறுபுறம், சிம்புவின் முந்தைய படத் தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர்களுக்கான நிலுவைத் தொகையை அல்லது பிரச்சனையைத் தீர்க்காமல் புதிய படத்திற்கு ஒத்துழைக்க முடியாது என்ற நிலையில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

வெற்றிமாறன் போன்ற ஒரு முன்னணி இயக்குநர் மற்றும் சிம்பு போன்ற ஒரு நட்சத்திரத்தின் படம் சிக்கலில் இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.