வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எஸ்.ஐ. உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. மனைவி செய்த கொடூரம்!
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்த காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தனது வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றிக் கொடூரமாக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் ராஜ் (58). கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1992-ம் ஆண்டு காவலராகப் பணியில் சேர்ந்தவர். நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 1-வது தெருவில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
ராஜின் மனைவி செல்வராணிக்கு (32) இது இரண்டாவது திருமணமாகும். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். ராஜ் தனது மனைவியின் மீதும் குழந்தைகளின் மீதும் மிகுந்த பாசம் கொண்டு, செல்வராணியை வக்கீல் படிப்புக்கும் படிக்க வைத்துள்ளார். சமீபத்தில் தான் செல்வராணி வக்கீல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சம்பவத்திற்கு முந்தைய நாள், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் குடும்பத்தினருடன் புரசைவாக்கத்தில் துணிகள் வாங்கிவிட்டு, காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பியுள்ளார். அன்று வீட்டின் கீழ் அறையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென புகை மண்டலம் எழுந்துள்ளது. கீழே வந்து பார்த்த செல்வராணி, ராஜ் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடந்ததாகக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தடய அறிவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் அறை முழுவதும் பெட்ரோல் வாசனை வீசியது. மேலும் ராஜின் முந்தைய நாள் நடவடிக்கைகள் மனஉளைச்சலில் இருப்பது போல் இல்லாததால் போலீசாருக்கு ராஜின் மரணத்தின் மீது சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த நேரத்தில் ராஜின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கில் தப்பியோடியது பதிவாகியிருந்தது.
இது குறித்த போலீசாரின் விசாரணையில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. மேலும் செல்வராணியின் செல்போன் பதிவுகளைக் கொண்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் தன்னைத் தினமும் அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும், கடந்த 3 மாதங்களாகத் தான் அனுபவித்த சித்ரவதைக்குத் தீர்வு காணத் தனக்குத் தெரிந்த தேவா என்பவன் மூலம் ராஜைத் தீர்த்துக் கட்டியதாகவும் செல்வராணி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராஜ் விழித்திருக்காமல் இருக்க அவருக்குத் தூக்க மாத்திரை கலந்த உணவு கொடுத்து அயர்ந்து தூங்கச் செய்துள்ளனர். அதன்பிறகு தேவா வந்து ராஜ் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேவாவுக்கும் செல்வராணிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள தேவாவைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மனைவியின் துணையோடு சொந்த வீட்டிலேயே எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
