'சார் தாம்' யாத்திரை இன்று தொடங்கியது... 18.25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து சாதனை!
இந்துக்களின் புனிதப் பயணமாகக் கருதப்படும் பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு தளங்களை உள்ளடக்கிய 'சார் தாம்' யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்குகியது. கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டிருந்த நடைபாதைகள், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு யாத்திரை செல்வதற்குப் பக்தர்கள் மத்தியில் அதீத ஆர்வம் நிலவுகிறது. மார்ச் 6-ம் தேதி தொடங்கிய ஆன்லைன் முன்பதிவு மூலம் இதுவரை 18.23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று தொடங்கப்பட்ட நேரடி முன்பதிவில் ஒரே நாளில் 2,173 பேர் இணைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த முன்பதிவு எண்ணிக்கை 18.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அட்சய திருதியை நன்னாளான இன்று, உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் முதலில் திறக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து மே 22-ம் தேதி கேதர்நாத் கோவில் நடை திறக்கப்படும். மே 23-ம் தேதி பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்படும்.
ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்பதால், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இமயமலையை நோக்கிப் பயணிக்கத் தயாராகி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் யாத்திரை செல்லும் பாதைகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் தங்குமிட வசதிகள் பக்தர்களுக்காகச் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் அல்லது நேரடி முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், விதிகளுக்கு உட்பட்டுப் பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
