தமிழகத்தில் தொடரும் அவலம்... 20 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்!

 
கஞ்சா கஞ்சா

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினர் தக்கலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கஞ்சா

போலீசார் நடத்திய சோதனையில், அவர் வைத்திருந்த பைகளில் 20 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட நபர் நாகர்கோவில் காமராஜபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப்ராஜ் என்பவரது மகன் ஜெரின்ஜோஸ் (37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கக் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கஞ்சா

மேலும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது வெறும் வழக்குப்பதிவு மட்டுமின்றி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.