தமிழகத்தில் தொடரும் அவலம்... அரசு மருத்துவமனை ICU-வில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை!

 
கடலூர் அரசு மருத்துவமனை டார்ச்லைட் அறுவைசிகிச்சை கடலூர் அரசு மருத்துவமனை டார்ச்லைட் அறுவைசிகிச்சை

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப்பிரிவுஉள்ளிட்ட முக்கிய வார்டுகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்ட சம்பவம் நோயாளிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாகக் கருதப்படும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்தடையால், உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவசர சிகிச்சை பிரிவு தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் உள்நோயாளிகள் வார்டு ஆகியவற்றில் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். மாலை 6 மணிக்குத் தொடங்கிய மின்தடை, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மருத்துவமனை வளாகத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்சாரக் கேபிள் திடீரென துண்டிக்கப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனை டார்ச்லைட் அறுவைசிகிச்சை

இதய நோய் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மின்சாரம் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர். மின்சாரம் இல்லாத நிலையிலும், நோயாளிகளின் உயிரைக் காக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தைப் பயன்படுத்திச் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரியப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைப் பராமரிப்புக் குழுவினர் விரைந்து வந்து, துண்டிக்கப்பட்ட கேபிளைச் சரிசெய்யும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர். விரைவில் மின்சாரம் வழங்கப்பட்டு நிலைமை சீரமைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தலைமை மருத்துவமனையில் மாற்று மின்சார வசதி உடனடியாகச் செயல்படாதது குறித்துப் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.