மயிலையில் அறுபத்து மூவர் விழா தொடங்கியது... வெள்ளி விமானத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர்!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலின் பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வான 'அறுபத்து மூவர்' திருக்காட்சி இன்று அரங்கேறியது. சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமான 63 நாயன்மார்களும் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இன்று காலை 9 மணியளவில், திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளி, எலும்பைப் பெண் உருவமாக்கி பூம்பாவையை உயிர்ப்பிக்கும் அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மதியத்திற்கு மேல் விழாவின் சிகரமான அறுபத்து மூவர் புறப்பாடு தொடங்கியது. 63 நாயன்மார்களின் சிலைகளும் தனித்தனி சப்பரங்களில் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதிகளில் அணிவகுத்து வந்தன. "தென்னாடுடைய சிவனே போற்றி" என்ற முழக்கத்துடன் பக்தர்கள் நாயன்மார்களை வரவேற்றனர்.

நாயன்மார்கள் முன்னே செல்ல, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வெயிலின் தாக்கத்தைக் குறைக்க மயிலாப்பூர் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலையில் குவிந்தனர். இதனால் மயிலாப்பூர் பகுதியே மக்கள் கடலாகக் காட்சியளித்தது. அறுபத்து மூவர் விழாவையொட்டி, சென்னை மாநகரக் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

மயிலாப்பூர் மாட வீதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இன்று இரவு பார்வேட்டைக்கு சந்திரசேகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறும். நாளை ஐந்திருமேனிகள் விழா சிறப்பாக நடைபெறும்.
ஏப்ரல் 1ம் தேதி தீர்த்தவாரி மற்றும் இரவு 8 மணிக்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்துடன் கொடி இறக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான பங்குனிப் பெருவிழா முறைப்படி நிறைவடையும்.
