கன்னத்தில் அறைந்த கயல்விழி... மு.க.அழகிரி மகள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று சென்னை அடையாறில் உள்ளது. இந்த கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், தகராறில் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அடையாறில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வங்கியின் லிப்ட் திடீரெனப் பழுதானது தொடர்பாக, கயல்விழிக்கும் வங்கி மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது கயல்விழி வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட வங்கி மேலாளர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்கள் மற்றும் வங்கியின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கியின் மேலாளருடன் ஏற்பட்ட தகராறில் மு.க.அழகிரியின் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
