விண்ணதிர்ந்த ‘கோவிந்தா’ கோஷம்... மதுரையே திரளுது... தங்கப் பல்லக்கில் புறப்பட்ட அழகர்... இன்று மதுரை எல்லையில் ‘எதிர்சேவை’!

 
அழகர் கள்ளழகர் சித்திரைத் அழகர் கள்ளழகர் சித்திரைத்

’கோவிந்தா’ கோஷம் விண்ணைப் பிளக்குது. ஒட்டுமொத்த மதுரை மாநகரும் திரண்டு அழகரை வரவேற்க தயாராகி நிற்கிறது. தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்பட்டார் அழகர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா சைவ மற்றும் வைணவ ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கி தற்போது களைகட்டி வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று மாசி வீதிகளில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

இந்நிலையில் அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வருகை தரும் வைபவம் நேற்று மாலை தொடங்கியது. கள்ளர் வேடம் தரித்து, தங்கப் பல்லக்கில் அமர்ந்து மதுரை நோக்கிப் புறப்பட்ட அழகரை வழியெங்கும் உள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்று வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 'எதிர்சேவை' இன்று ஏப்ரல் 30ம் தேதி மாலை மதுரையின் எல்லைப் பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தங்கள் வீட்டுப் பிள்ளையை வரவேற்பது போல மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு அழைக்கும் இந்தக் காட்சி உணர்ச்சிப் பூர்வமான ஒன்றாக அமையும்.

எதிர்சேவையைத் தொடர்ந்து, மே 1ம் தேதி அதிகாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா" முழக்கமிட்டு வரவேற்க, தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மதுரையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்!

அழகரின் வருகையையொட்டி மதுரை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.