'SPECTRUM' திட்டம்... பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க 8 நிறங்களில் 'கலர் கோடு' - தமிழகக் காவல்துறை அதிரடி!
ரவுடிகள் மற்றும் தொடர் திருடர்களுக்குச் சரித்திரப் பதிவேடு பராமரிப்பது போல, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அவர்களின் குற்றத்தன்மை மற்றும் ஆபத்தின் தீவிரத்தின் அடிப்படையில் 8 பிரிவுகளாகப் பிரித்துக் கண்காணிக்க 'ஸ்பெக்ட்ரம்' (SPECTRUM - Sexual offender Profiling, Evaluation, Classification, Tracking, Risk Assessment and Unified Monitoring System) என்ற புதிய கலர் கோடு திட்டத்தைத் தமிழகக் காவல்துறை தென் மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களை உள்ளடக்கி இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் ஈவ் டீசிங் முதல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் வரை பல்வேறு குற்றங்களில் சிக்கிய சுமார் 15,000 நபர்களின் விவரங்கள் முழுமையாகத் திரட்டப்பட்டு, டிஜிட்டல் முறையில் மேப் செய்யப்பட்டுள்ளன.

இனிமேல் அனைத்துப் பாலியல் குற்றவாளிகளையும் காவல்துறை ஒரே மாதிரியாக நடத்தாமல், அவர்களின் ஆபத்து அளவைக் கொண்டு பின்வருமாறு வண்ணக் குறியீடு வழங்கித் தனித்தனியாகக் கண்காணிக்கவுள்ளது:
கூட்டுப் பாலியல் வன்கொடுமை, தொடர் போக்சோ குற்றவாளிகள் மற்றும் சமூகத்திற்கு உச்சக்கட்ட அச்சுறுத்தலாக விளங்கும் கொடூரப் பாலியல் வேட்டையாடுபவர்கள். இவர்களின் ஜாமீன் மற்றும் பரோல் நிலவரங்கள் தினசரி கண்காணிக்கப்படும்.
ஆரஞ்சு குறியீடு: பெண்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்துவோர், தொடர் சீண்டல் மற்றும் பின்தொடர்ந்து தொல்லை தரும் ஸ்டாக்கர்கள்.
நீல நிறக் குறியீடு: இணையவழி பாலியல் குற்றவாளிகள், ஆன்லைன் மூலம் குழந்தைகளைக் குறிவைப்பவர்கள் மற்றும் இணையவழிப் பாலியல் மிரட்டல் விடுபவர்கள். இவர்களின் மொபைல் எண்கள் மற்றும் ஐபி லாக்கள் கண்காணிக்கப்படும்.

கறுப்புக் குறியீடு: மனிதக் கடத்தல் நெட்வொர்க், விபச்சார கும்பல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவோர்.
ஊதா நிறக் குறியீடு: ஒரே பாலின டேட்டிங் செயலிகளை தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிப் பறிப்பில் ஈடுபடுபவர்கள்.
வெள்ளி நிறக் குறியீடு: பதின்ம வயதுச் சிறுவர்கள் . இவர்களுக்கு வழக்குப்பதிவு செய்யும் முன்பாகப் பெற்றோருடன் சேர்த்து உரிய மனநல ஆலோசனைகள் வழங்கிச் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமன்றி, அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய தொடர் குற்றவாளிகள் மீது மட்டுமே காவல்துறை தங்களது முழு கவனத்தையும் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த 'ஸ்பெக்ட்ரம்' திட்டம் ஒரு மிகச் சிறந்த ஆயுதமாக இருக்கும் எனத் தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
