“அதிகாரிகள் தாமதத்துக்கு மாணவி பொறுப்பல்ல...” - மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வி.கீர்த்தி என்ற மாணவி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பிக்கும் போது போதிய சான்றிதழ்கள் கைவசம் இல்லாததால், இருப்பிடச் சான்று, சாதிச் சான்று மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் சான்று ஆகியவற்றை பின்னர் சமர்ப்பிப்பதாக உறுதிமொழி அளித்திருந்தார்.
அதன்பின்னர், அவருக்குக் ஆகஸ்ட் 4-ம் தேதி சிறுபான்மையினர் சான்றிதழும், 11-ம் தேதி இருப்பிடச் சான்றிதழும், 15-ம் தேதி சாதிச் சான்றிதழும் கிடைத்தன. அந்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றபோது, ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துவிட்டதாகக் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில்,“சான்றிதழ் வழங்கும் அரசு அதிகாரி தாமதம் செய்ததற்காக மாணவியை ஒருபோதும் பொறுப்பாக்க முடியாது. சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் சமர்ப்பிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக விண்ணப்பத்தை நிராகரித்த மருத்துவக் கல்வி இயக்ககத்தின் நடவடிக்கை ஏற்புடையதல்ல.
மாணவியின் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, தகுதி மற்றும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் அவரை மருத்துவக் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும். முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு ஏற்கனவே நிறைவடைந்திருந்தால், அதற்கு அடுத்தபடியாக வரும் சுற்றுகளில் மாணவியின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து சேர்க்கை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தின் காலதாமதத்தால் மாணவியின் மருத்துவக் கனவு பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
