'வெற்றித் தறி' விற்பனையகம்... இன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

 
வெற்றித் தறி கோ ஆப்டெக்ஸ்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'வெற்றித் தறி' பிரீமியம் விற்பனை நிலையங்கள் மற்றும் புதிய மின் வணிகத்தளத்தை முதலமைச்சர் விஜய் இன்று ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

'வெற்றித் தறி' விற்பனையகம், கோ-ஆப்டெக்ஸின் வழக்கமான கிளைகளை விட உயர்தர மற்றும் பிரீமியம் தயாரிப்புகள் மட்டும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோ-ஆப்டெக்ஸ் இணையதளம் பயன்பாட்டில் உள்ள நிலையில், சர்வதேச நுகர்வோரைக் கவரும் வகையில் நவீன அம்சங்களுடன் கூடிய புதிய இ-காமர்ஸ் தளமும் இதனுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கோ ஆப்டெக்ஸ்

தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, மாநிலத்தின் முக்கிய நகரங்கள் தோறும் வெற்றித் தறி ஷோரூம்கள் படிப்படியாக அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக, கைத்தறித் துறையில் சிறந்து விளங்கும் மாநில அளவிலான சிறந்த நெசவாளர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி முதலமைச்சர் விஜய் கௌரவிக்க உள்ளார்.