தவெக அரசுக்கு அளித்துள்ள ஆதரவு தற்காலிகமானதுதான் - இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் பேட்டி!

 
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன்

தமிழகத்தில் தவெக அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் அளித்து வரும் ஆதரவு நிரந்தரமானது அல்ல என்றும், அது முற்றிலும் தற்காலிகமானதுதான் என்றும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை தனது பொருளாதாரக் கொள்கை குறித்து அரசு தெளிவாக விளக்கவில்லை என்றும், ஆளுநர் உரையில் சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாடுகள் குறித்த எவ்வித தெளிவும் இல்லாமல் அது ஒரு வெற்று ஆவணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சாடினார்.

கம்யூனிஸ்ட்

தமிழக பட்ஜெட்டில் தனியார்மயம் தலைதூக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், மாநிலத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப் போக்குகிறோம் என்ற பெயரில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்பட்டு அவர்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தரப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் புதிய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை என்றார்.

தவெக அரசுக்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவு கொள்கை அடிப்படையிலானது அல்ல என்றும், எப்போது வேண்டுமானாலும் இந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்படலாம் என்றும் சுப்பராயன் வெளிப்படையாகத் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தல்களில் தவெக-வுக்கு இடதுசாரிகளின் ஆதரவு இல்லை என்று தெளிவுபடுத்திய அவர், இந்தத் தேர்தல்களில் பணபலமும் அதிகாரபலமும் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

சண்முகம் கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் பிரச்சினைகளுக்காகவும் எதிர்கால அரசியலுக்காகவும் நீண்டகாலச் செயல் திட்டங்களை வகுத்து வருவதாகவும், இந்த ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட தேர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் அவர் கூறினார்.