விஜய்க்கு IUMLம் ஆதரவு - தவெக கூட்டணியின் பலம் 120-ஆக உயர்ந்தது!
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான இறுதிக்கட்ட நகர்வுகள் அரங்கேறி வரும் வேளையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது ஆதரவைத் தவெக-விற்கு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான கூட்டணி சட்டமன்றத்தில் அசைக்க முடியாத பலத்தைப் பெற்றுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக IUML கட்சியின் நிலைப்பாட்டில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது.

முதலில் ஆதரவு என்று கூறிவிட்டு, பின்னர் "ஆதரவு இல்லை" எனப் பின்வாங்கியதால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட IUML கட்சி, தவெக ஆட்சி அமைக்கத் தனது நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கிய நிலையில், IUML-ன் 2 இடங்களும் சேர்ந்தது விஜய்க்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கூட்டணி கணக்கு: தவெக (108) + காங்கிரஸ் (5) + இடதுசாரிகள் (3) + விசிக (2) + IUML (2) = 120 எம்.எல்.ஏ-க்கள்.

ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட தற்போது 2 இடங்கள் கூடுதலாக உள்ளதால், 'குதிரை பேரம்' அல்லது 'ஆதரவு வாபஸ்' போன்ற அச்சுறுத்தல்கள் இன்றி விஜய் நிம்மதியாகப் பதவியேற்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்கள் தயார் நிலையில் இருப்பதால், இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது. தமிழக வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் இத்தனை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டி, ஒரு புதிய கட்சி ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
