தமிழக அரசு செலவு குறைப்பு நடவடிக்கை - உயரதிகாரி பதவிகள், அவசியமில்லாத பணியிடங்களை ரத்து செய்யத் திட்டம்!
அதிகரித்து வரும் நிதிச் சுமை மற்றும் புதிய நலத்திட்டச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில், அனைத்துத் துறைகளிலும் உயரதிகாரி பதவிகளைக் குறைப்பது மற்றும் அவசியமில்லாத பணியிடங்களை ரத்து செய்வது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் மொத்த கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.3.50 லட்சம் கோடியாக இருக்கும் எனவும், மொத்த செலவினம் ரூ.4.05 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பணியாளர்களின் சம்பளத்திற்காக ரூ.77,310 கோடியும், கடன்களுக்கான வட்டிச் செலுத்துதலுக்காக ரூ.76,452 கோடியும், பல்வேறு மானியங்களுக்காக ரூ.1.72 லட்சம் கோடியும் செலவிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், பொங்கல் முதல் மகளிருக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் மற்றும் மாதம் ரூ.2,500 வழங்கும் தேர்தல் வாக்குறுதிகள் போன்றவற்றுக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நிதி மேலாண்மை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மது விற்பனை மற்றும் கனிமங்கள் விற்பனையில் உள்ள முறைகேடுகளைத் தடுத்து வருவாயை உயர்த்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்துத் துறைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு துறையிலும் உள்ள தேவையற்ற பணியிடங்கள் குறித்துக் கணக்கெடுக்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்கள் பணியிடங்களைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
