“இனி அண்ணன் சீராக 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வாங்க இது கட்டாயம்” - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 
பட்டுப்புடவை அண்ணன் சீர்

தமிழகத்தில் திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் (8 கிராம்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கித் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டை இல்லாதவர்கள், அதற்குப் புதிதாக விண்ணப்பித்த பதிவு ரசீதுடன், பான் கார்டு உள்ளிட்ட அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட வேறு பதினொரு ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டம்

முன்னதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்கு 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை சீர்வரிசையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இத்திட்டத்தின் கீழ் 22 காரட் எடையுள்ள 8 கிராம் தங்க நாணயமும், ஒரு உயர்தரப் பட்டுப்புடவையும் மணப்பெண்ணுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டச் செயலாக்கப் பணிகளுக்காகத் தமிழக அரசு சார்பில் தற்போது 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மணப்பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. (தேர்தல் வாக்குறுதியில் இந்த வருமான வரம்பு ஐந்து லட்ச ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது).

திருமணம்

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இணையவழி மூலமாக மட்டுமே பெறப்படவுள்ளன. இதற்கெனத் பிரத்யேகமான இணையதளம் ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்றும், இத்திட்டம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலத்துறையின் மூலமாகத் தனியாக வெளியிடப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.