அண்டை மாநிலங்களை போல் தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்தியா முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கை வலுவடைந்த காரணத்தால் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை மத்திய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது; அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கையாக இருக்கிறது.

குறிப்பாக, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
