ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘கோந்தல்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது... இளையராஜா இசையில் நவ. 13ல் ரிலீஸ்!

 
கோந்தல்

இயக்குநர் சந்தோஷ் தவாகர் இயக்கத்தில், பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'கோந்தல்' திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

மகாராஷ்டிராவின் பாரம்பரிய 'கோந்தல்' சடங்கு மற்றும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி மரபுகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'கோந்தல்'. சந்தோஷ் தவாகர் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான 'சில்வர் பீக்காக்' விருதை வென்ற படம், 2027-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கும் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுப் பெருமை பெற்றுள்ளது.

கோந்தல்

பல்வேறு விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.