"தியேட்டர்களில் அமைச்சர்கள் விடும் கண்ணீருக்குக் குற்றால அருவியே தோற்றுவிடும்": ஆர்.பி.உதயகுமார் கிண்டல்!

 
ஆர்.பி.உதயகுமார்

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்த திமுக அமைச்சர்களின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்துக் காரசாரமாகவும் "நாட்டின் ஜனநாயகக் காவலர்களாகத் தங்களை உருவகப்படுத்திக் கொள்பவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' போடுவதற்காகவே தியேட்டருக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள்" எனக் சாடினார். மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அமைச்சர்கள் திரையரங்குகளில் நேரத்தைச் செலவிட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

திரையரங்கில் படம் பார்த்தபோது அமைச்சர்கள் உணர்ச்சிவசப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவர், "குற்றால அருவியில் தண்ணீர் கொட்டியதை விட, 'ஜனநாயகன்' படம் பார்த்தபோது தமிழக அமைச்சர்களின் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீருக்கு வேறு எதுவுமே போட்டி போட முடியாது" என எள்ளலாகக் குறிப்பிட்டார்.

மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அமைச்சர்கள், இதுபோன்ற விளம்பர அரசியலில் ஈடுபடுவதை விட்டுவிட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.