தொடரும் பதற்றம்... பாரசீக வளைகுடாவில் சிக்கிய 22 இந்தியக் கப்பல்கள்.. 600-க்கும் மேற்பட்ட மாலுமிகள் தத்தளிப்பு!

 
ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால், 22 இந்தியக் கப்பல்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. உலகின் 20% எரிசக்திப் போக்குவரத்து நடைபெறும் இந்த வழித்தடம் மூடப்பட்டதால், இந்தியாவுக்கு வர வேண்டிய எரிபொருள் கப்பல்கள் அங்கேயே முடங்கின.

ஹார்முஸ்

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, பாரசீக வளைகுடாவின் மேற்குப் பகுதியில் தற்போது 22 இந்தியக் கப்பல்கள் நங்கூரமிட்டு காத்துக் கிடக்கின்றன. இவற்றுள் 6 எல்.பி.ஜி (LPG) காஸ் கப்பல்கள், 4 கச்சா எண்ணெய் கப்பல்கள், மற்றும் ஒரு எல்.என்.ஜி (LNG) கப்பல் ஆகியவை அடங்கும். இந்த கப்பல்களில் மட்டும் சுமார் 611 இந்திய மாலுமிகள் தவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைத் தவிர, ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்குப் பகுதியில் மேலும் 3 கப்பல்கள் 76 மாலுமிகளுடன் காத்திருக்கின்றன.

இந்த இக்கட்டான சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதன் பலனாக, ஈரான் அரசு ஒரு அரிய விதிவிலக்காக இரண்டு இந்தியக் கப்பல்கள் மட்டும் கடந்து செல்ல அனுமதி அளித்துள்ளது.

சிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரண்டு எல்.பி.ஜி கப்பல்கள் சனிக்கிழமை அதிகாலை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டன. இவை சுமார் 92,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் மார்ச் 16 மற்றும் 17 தேதிகளில் குஜராத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ்

இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தேவையில் 90% மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சில நகரங்களில் மக்கள் பீதியடைந்து சமையல் எரிவாயுவை முன்கூட்டியே முன்பதிவு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் உள்ள கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தகவல்களை வழங்கி வருகிறது. இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பாக இந்தியக் கடற்படை தனது போர்க்கப்பல்களை அந்தப் பகுதியில் நிறுத்தியுள்ளது.

தூதரகப் பேச்சுவார்த்தை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் ஈரான் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

"எங்கள் முன்னுரிமை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எங்கள் மாலுமிகளின் பாதுகாப்புதான்" என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 22 கப்பல்களும் பத்திரமாக நாடு திரும்பும் வரை இந்தப் பதற்றம் நீடிக்கும் என்றே தெரிகிறது.